கணக்குப் போட்டுக் களமிறங்கும் பாஜக!

By காமதேனு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததற்கு, அக்கட்சி ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை சிறப்பாகக் கையாண்டது ஒரு முக்கியக் காரணம். அதேபோல், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சமூக ஊடகப் பிரச்சார உத்திகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது பாஜக. இப்போது இந்தியர்களிடையே பரவியிருக்கும் வாட்ஸ் -அப் செயலியையும் பயன்படுத்தத் திட்டமிடுகிறது அந்தக் கட்சி.

பாஜக-வில் தற்போது எம்பி-க்களாக இருக்கும் அத்தனை பேரும் கட்டாயம் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கப்படுவார்கள். அண்மையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா “ஒவ்வொரு எம்பி-க்கும் 23 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களே அந்த எம்பி-யின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை நிர்வகிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

அவரது திட்டப்படி ஒவ்வொரு எம்பி-க்கும் ஒரு கால் சென்டர் உருவாக்கப்படும். இங்கே 15 பேர் பணியில் இருப்பார்கள். இவர்கள் எம்பி-க்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வது, ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கானோருக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது உள்ளிட்ட பணிகளைக் கவனித்துக்கொள்வார்கள். நான்கு பேர் எம்பி-யின்பெயரில் இயங்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை நிர்வகிப்பார்கள். “ஒவ்வொரு எம்பி-யின் ஃபேஸ்புக் பக்கத்தையும் குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேராவது ‘லைக்’ செய்திருக்க வேண்டும், ட்விட்டர் பக்கத்தையும் அதிகம் பேர் ‘ஃபாலோ’ செய்ய வேண்டும்” என்பது பிரதமரின் நேரடி உத்தரவாம்.

மீதமுள்ள நான்கு பேர், ஊடகங்களை கவனித்துக் கொள்வார்கள். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட எம்பி-யின் நற்பணிகள் ஆகியவை பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு அனுப்புவதும் எம்பி-யின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு போதிய ஊடக வெளிச்சம் கிடைப்பதை உறுதி செய்வதும் இந்த நால்வர் அணியின் பொறுப்பு. இந்தக் குழுக்கள் அனைத்தையும் மேற்பார்வையிடவும் வழிநடத்தவும் சுமார் 20 பேர் கொண்ட மத்தியக் குழு நியமிக்கப்படுமாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE