குமரியில் பிரதமர் மோடி முதல் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

> கன்னியாகுமரியில் பிரதமர் மோடி!: 3 நாட்களுக்கு 45 மணி நேரம் தொடர்ந்து தியானம் மேற்கொள்வதற்காக வியாழக்கிழமை கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, வெள்ளை வேட்டி அணிந்து பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறைக்கு சிறப்பு படகு மூலம் சென்றடைந்தார். பிரதமரின் வருகையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தார். அங்கிருந்து, கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். பின்னர், பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது பிரதமருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பிரதமருக்கு பகவதியம்மனின் திருவுருப்படம் வழங்கப்பட்டது.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு குழாமை வந்தடைந்தார். அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு சிறப்பு படகில் சென்றார்.

பிரதமரின் வருகையையொட்டி, வியாழக்கிழமை காலை முதலே விவேகானந்தர் பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், அந்தப் பகுதி முழுவதுமே காவல் துறை மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி ஜூன் 1-ம் தேதி மாலை வரை, தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் மேற்கொள்கிறார். ஜூன் 1-ம் தேதி மாலை 3 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், தியானக் கூடத்தில் இருந்து வெளியே வருகிறார். பிறகு, மாலை 3.30 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

> ஜம்முவில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து: பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு மாவட்டத்தில் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஜம்மு மாவட்டத்தின் சோகி சோரா பெல்ட்டில் உள்ள டாங்லி மோர் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

> கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: மே 31-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமை கேரளாவில் பருவமழை தொடங்கியது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தனது பதிவில், “தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. மேலும், பருவமழை வடக்கு நோக்கி நகர்ந்து வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறி வருகிறது. வடகிழக்கு பகுதிகளிலும் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி கொச்சி நகரம் தத்தளித்து வருகிறது.

> உடல்நிலை ‘அரசியல்’ குறித்து நவீன் பட்நாயக் விளக்கம்: “எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். வாக்குகளைப் பெறுவதற்காகவே எனது உடல்நிலை குறித்து பாஜக வதந்தி பரப்புகிறது” என்று பிரதமர் மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

> மோடியின் வெறுப்பு பேச்சுகள் - மன்மோகன் சிங் விமர்சனம்

வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை, பிரதமர் நரேந்திர மோடி குறைப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

> “மோடி பிரச்சாரத்தில் 224 முறை முஸ்லிம், மைனாரிட்டி சொற்கள்”: “நரேந்திர மோடி தனது 15 நாள் உரையில் 232 முறை காங்கிரஸ் பெயரை உச்சரித்தார். மோடி என்ற வார்த்தையை 758 முறை பயன்படுத்தியுள்ளார். இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி பற்றி 573 முறை பேசினார். ஆனால், பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

சமூகத்தை பிரிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை கோயில்கள், மசூதிகள் குறித்து பேசினார். முஸ்லிம்கள், மைனாரிட்டி போன்ற வார்த்தைகளை 224 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

> தமாகா-வில் இருந்து ஈரோடு கவுதமன் விலகல்: பாஜகவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸின் மாநில நிர்வாகியான ஈரோடு கவுதமன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

> கிளாசிக்கல்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!: நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. இதற்கு முன்னர் இந்த ஃபார்மெட்டில் இருவரும் மூன்று முறை விளையாடி உள்ளனர். அந்த மூன்று ஆட்டமும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதே தொடரில் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

> இந்தியா vs பாக். - லீக் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: வரும் ஜுன் 9-ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்தப் போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

> ஐ.நா செயல்பாடு குறித்து துருக்கி அதிபர் ஆவேசம்: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐ.நா அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார் துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன். அவர், “ஐ.நா-வின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டது. தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு உள்ளீர்கள். இஸ்ரேல், காசாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது” எனப் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE