இந்தியாவின் பண்டைய நாகரிக மனிதர்கள் யார் என்பது நீண்ட காலமாகவே விவாதப் பொருளாக இருந்துவரும் நிலையில் சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்தான் என்பதை ராக்கீகடீ அகழ்வாராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
2015-ல் புணேயின் டெக்கான் கல்லூரித் துணைவேந்தர் டாக்டர் வசந்த் ஷிண்டேவும், அவரது அணியினரும் ஹரியாணாவின் ராக்கீகடீ என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டனர். 2015-லேயே இந்த அகழ்வாராய்ச்சி முடிவடைந்துவிட்டாலும், ஆய்வின் முடிவுகளை வெளியிடவில்லை. காரணம், இந்துத்துவவாதிகள் இந்த ஆய்வு முடிவுகளை எப்படி எதிர்கொள்வார்களோ என்ற தயக்கம்தான்.
மூன்றாண்டுகள் கழித்துத் தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அந்த ஆய்வின் முடிவுகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம். ராக்கீகடீதான் இந்தியாவின் மிகப் பெரிய சிந்து சமவெளி நாகரிகப் பகுதி. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1920-களில் அகழாய்வு செய்யப்பட்ட மொஹெஞ்ஜோ-தாரோவைவிட மிகப் பெரிய அகழாய்வுத் தளம் இது. இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரிகமாகக் கருதப்பட்ட இந்தப் பகுதி எப்படி வீழ்ச்சியடைந்தது என்பது தெரியவில்லை.
ராக்கீகடீயில் ஷிண்டே அணியினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்ததாகவும், எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள ‘Petrous bone’ என்ற பகுதியை ஆய்வு செய்ததில் அந்த எலும்புக்கூட்டின் மரபணு திராவிடர்களான தென்னிந்தியர்களின் மரபணுவோடு ஒத்துப்போவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது இந்த எலும்புக்கூட்டின் மரபணு குறியீடு, ஆரியர்களின் மரபணு குறியீடான R1a1 குறியீட்டுடன் ஒத்துப்போகவில்லை. குறிப்பாகத் தற்போதைய நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களின் மரபணுவோடு இது கூடுதலாக ஒத்துப்போகிறது என்றும், இந்த மனிதர்கள் ஆரம்பகால திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.