தேசம் கடந்தும் நேசம் சம்பாதித்த தலைவன்!

By காமதேனு

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தை மட்டுமல்ல... சர்வதேசத் தமிழர்களையும் துயரக் கடலில் தள்ளிவிட்டுச் சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு தேசம் கடந்தும் தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதிக்காகத் தமிழக அரசு துக்க அனுசரிப்பு அறிவிப்பதற்கு முன்பாகவே முந்திக்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் ஒரு நாள் அரசு விடுமுறையும், மூன்று நாட்கள் துக்கமும் அறிவித்தார். பிறகு, அதை ஏழு நாட்களாக மாற்றினார். காரைக்காலில் அமையவிருக்கும் முதுகலை பட்டப்படிப்பு மையத்துக்கும், கோட்டுச்சேரி - திருநள்ளாறு சாலைக்கும் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதாக அறிவித்தார். அத்துடன், “புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் ஒரு இருக்கை அமைக்க புதுச்சேரி அமைச்சரவை பரிந்துரை செய்யும்” எனவும் அறிவித்த நாராயணசாமி, “புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்கப்படும்” எனவும் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சென்னைக்கு ஓடோடி வந்தார்.

இதனிடையே, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசும் ஒரு நாள் தேசம் தழுவிய துக்கம் அறிவித்தது. இதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் தேசியக் கொடிகள் ஒருநாள் மட்டும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அனைத்து மாநிலங்களும் ஒரு நாள் துக்கம் அனுஷ்டித்தன. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக டெல்லி சட்டமன்றம் ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பிற மாநில முன்னாள் முதல்வருக்காக டெல்லி சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல்முறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE