காஷ்மீரில் வெடித்த கருத்துச் சுதந்திரப் போர்!

By காமதேனு

ஒரு ட்வீட் போட்டதற்காக ஜம்மு காஷ்மீரில் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைஸல் மீது, அரசு விதிமுறைகளை மீறியதற்கான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரி ஷா  ஃபைஸல். இவர், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பாலியல் வன்முறை அதிகரித்துவிட்டது என்ற பொருள்படும்படி ட்வீட் செய்திருந்தார். இதற்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கெல்லாம் அசராத ஃபைஸல், தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த விவாதத் துக்கான தொடக்கமாக அமையட்டும் என்கிறார்.

ஏனெனில், அரசு சேவையில் உள்ள எவரும் மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகளையோ நடவடிக்கைகளையோ எந்தவிதமான ஊடகத்திலும் விமர்சிக்கக் கூடாது. 2016-லிருந்து இந்தப் பட்டியலில் சமூக வலைதளங்களையும் சேர்த்தது மத்திய அரசு. 
ஆனால், ஷா ஃபைஸல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவித்துவருகிறார். காஷ்மீர் விவகாரம் குறித்தும் துணிச்சலான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதனால், அவர் ஒரு சமூக - அரசியல் விமர்சகராகவே அறியப்படுகிறார்.

1985-ல், காஷ்மீரில் பிறந்த ஃபைஸல், காஷ்மீர் வன்முறைக்கு தனது தந்தையைப் பறிகொடுத்தவர். 2010-ல்,ஐஏஎஸ் தேர்வில் முதல் இடம் பிடித்த முதல் காஷ்மீரியும் பைஸல் தான். கடந்த வாரம் ஒரு அதிர்ச்சிகரமான பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் ‘தந்தைவழிச் சமூகம் + மக்கள் தொகைப் பெருக்கம் + கல்வியறிவின்மை + மது + ஆபாசப் படங்கள் + தொழில்நுட்ப வசதிகள் + சட்ட ஒழுங்கின்மை = ரேப்பிஸ்தான்’ என்று குறிப்பிட்டு, தெற்காசிய நாடுகளில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதாக விமர்சித்திருந்தார். இதில், இந்தியாவும் அடக்கம் என்பதால் இந்திய அரசு ஃபைஸலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பைஸல் அரசு அதிகாரிக்கான விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காஷ்மீர் அரசுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE