புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் கடந்ததிங்கட்கிழமை காலை, டெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது கேஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் தன்னை கடுமையாக தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் புகார் கூறினார்.
முதலில் இப்புகார் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மவுனம் காத்தது. பிறகு அந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறினார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நேற்று லக்னோ வந்தபோது அவருடன் விமான நிலையத்தில் பிபவ் குமார் காணப்பட்டார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் முதல்வர் கேஜ்ரிவால் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு கேஜ்ரிவால் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
» தெலங்கானாவில் பரவலாக மழை: தணிந்தது வெப்பம்
» எனது உத்தரவாதத்தின் சமீபத்திய உதாரணம் சிஏஏ அமல்: பிரதமர் மோடி பெருமிதம்
இந்நிலையில் ஊடக தகவல்களின் அடிப்படையில் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாகமுன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் நேற்று சம்மன் அனுப்பியது. நேரில் ஆஜராகத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக ஸ்வாதி மாலிவால் நேற்று போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தாக்குதல் பற்றி வாக்குமூலம் பெறுவதற்காக டெல்லி போலீஸ் குழுவினர் நேற்றுமாலை ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தனர்.