தெலங்கானாவில் பரவலாக மழை: தணிந்தது வெப்பம்

By KU BUREAU

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் முழுவதும் நேற்று பரவலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹைதராபாத் உட்பட தெலங்கானா மாநிலம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி எடுத்தது. அதுவும் இந்த கத்திரி வெயிலில் மக்கள் வெளியே தலை காட்டவே அஞ்சினர். இந்நிலையில், நேற்று திடீரென கச்சிபவுலி, கூகட்பல்லி, நிஜாம்பேட்டா, ஹைதர் நகர், பேகம்பேட், ஆல்வால், ராயதுர்கம், பஞ்சகுட்டா, உப்பல் என நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தெலங்கானாவில் மஞ்சிராலா, ஜெய்சங்கர் பூபாலபல்லி, ரங்காரெட்டி, சங்காரெட்டி, விகாராபாத், மேதக், வனபர்த்தி, நாராயணபேட்டா, கத்வால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று அடித்தது.

பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், மேலும் 5 நாட்களுக்கு மழை தொடருமென ஹைதராபாத் வானிலை மையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE