பலாத்காரம் செய்யப்பட்ட மனசாட்சி

By காமதேனு

காஷ்மீரிலும் உத்தரபிரதேசத்திலும் சிறுமிகள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயதுக் குழந்தை அவள். கடந்த ஜனவரி 10-ம் தேதி வளர்ப்புக் குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டச் சென்றபோது கடத்தப்பட்டாள். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, வழக்கம்போல தேடிப்பார்ப்பதாகச் சொல்லிவிட்டார்கள். ஒரு வாரம் கழித்து வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. கொலைக்கு முன்பாக அவள் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியானது.

கொலையான சிறுமி, பகர்வால் என்ற முஸ்லிம் பழங்குடிச் சமூகத்தைச் சார்ந்தவள். விசாரணையில், அவளை இந்துக் கோயில் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்து கொன்ற 8 பேரைக் கண்டறிந்தது போலீஸ். இந்த 8 பேரில் அவளைத் தேடிச் சென்ற காவல்துறை அதிகாரி கஜுரியாவும் ஒருவர். இதைவிடப் பெரிய கொடுமை இவர்கள் நிரபராதிகள் என்று சொல்லி, அம்மாநில பாஜகவினர் சிலரும் சில இந்து அமைப்புகளும் தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.

அவளுக்கு நீதி கிடைக்க காஷ்மீர் முஸ்லிம்களும் இளைஞர்களும் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். நாடே கொந்தளித்துள்ளது. சமூக ஊடகங்களில் திரைப் பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரைத் தனிநாடாக அறிவிக்கக் கோரும் குரல்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE