மகாராஷ்டிராவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாறு பாடத்துக்கான வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்பே வெளியே கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. பொதுத்தேர்வுகள் நம் நாட்டில் எப்படி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன என்ற விவாதத்தையும் இது எழுப்புகிறது.
மும்பை கல்யாண் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், சுற்றுவட்டாரத்தில் இருந்த வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு 14 மாணவர்கள், தங்கள் மொபைல்களையும், பாடப் புத்தகங்களையும் வைத்து ஏதோ பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
சந்தேகமடைந்த ஆசிரியர், ஒரு மாணவனின் மொபைலை வாங்கி பார்த்தபோது அதில் அன்றைய தேர்வுக்கான வினாத்தாள் இருந்தது. இதன் மூலம் ஏற்கெனவே, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வினாத்தாள் கசியவிடப்பட்டிருப்பது தெரியவந்தது.
கேள்வித்தாள்களை கசியவிட்டவர் மாணவர்களுக்கான தனிப்பயிற்சி மையம் (கோச்சிங் செண்டர்) நடத்தும் ஃபெரோஸ்கான். மும்பையின் பல்வேறு பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தும் ரோகித் சிங், கசியவிடப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களைச் சென்றடைய உதவியிருக்கிறார்.