வால் போய் கத்தி வந்த கதையாகிவிட்டது, உத்தர பிரதேச அரசு மேற்கொண்டுவரும் பசுப் பாதுகாப்பு நடவடிக்கை. பசு குண்டர்களின் (!) அடாவடியால் உபியில் மாடுகளை விற்பது சவாலான காரியம் ஆகிவிட்டது.
வயதான பசுக்களையும் அடிமாட்டுக்காக விவசாயிகள் விற்க முடியாது; அவற்றின் ‘கணவன்’களான காளைகளையும் இறைச்சிக்காக வெட்ட அனுமதி கிடையாது. வேறு வழியின்றி, பால் சுரப்பை நிறுத்திய பசுக்களையும், காளைக் கன்றுகளையும் பராமரிக்க முடியாமல் அனாதையாக விட்டுவிடுவதே பெருமளவில் நடக்கிறது.
வீதிகளில் திரியும் இந்த மாடுகளுக்குப் புல் போடவும், தண்ணீர் வைக்கவும் ஆளில்லாததால் இவை விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. வயசான மாடுகள் இயற்கையாகவும், நோய்வாய்ப்பட்டும் வெட்டவெளியில் செத்துப்போவதால், சூழலுக்கு வேறு பிரச்சினையாகின்றன.
ஒருபுறம், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு முதல்வர் அலுவலகத்துக்கு மனுக்கள் பறக்கின்றன. மறுபுறம் மாடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக் காவல் நிலையங்கள் தோறும் புகார்கள் குவிகின்றன.