ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் தெலுங்கு பிராந்தியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை ஏப்ரல் 27 அன்று நடக்கவிருக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தொடக்க நாள் விழாவில் அறிவிப்பார் என்ற செய்தியே திருப்பங்களின் மையம்!
வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஹைதராபாத் எம்.பி. அசதுதீன் ஒவைஸி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான சிபு சோரன் ஆகியோர் ராவின் முயற்சிக்கு ஆதரவளித்திருப்பதாக அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஏப்ரல் 27 விழாவில் கலந்துகொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், திரிபுராவில் பாஜகவின் வெற்றிக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளின் வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியைப் புதுப்பித்துள்ளார் மம்தா பானர்ஜி. ஏற்கனவே சிவசேனை உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் அவர் தமிழகத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது கூட்டணி அமைப்பது குறித்தும் பேசியுள்ளார்.
காங்கிரஸுடனான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது திமுக. “தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால் கூட்டணி குறித்துத் தேர்தல் நேரத்தில்தான் முடிவெடுக்க முடியும்” என்று மம்தாவிடம் சொல்லிவிட்டதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது மம்தாவின் முயற்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.