சென்னை ஐஐடியில் தொழில்நுட்ப கண்காட்சி - வியக்கவைத்த மாணவர்களின் கண்டுபிடிப்புகள்

By KU BUREAU

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பிரம்மாண்ட தொழில்நுட்ப கண்காட்சியில் இடம்பெற்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையாளர்கள் கண்டு வியப்படைந்தனர்.

சென்னை ஐஐடி புத்தாக்க மையம் சார்பில் ‘திறந்த வெளி அரங்கு - 2025’ பிரமாண்ட தொழில்நுட்ப கண்காட்சி ஐஐடியில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உருவாக்கிய 60 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன.

இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறி வால் இயங்கும் மனித உருவம் (ஹியூமனாய்டு), துல்லியமாக மயக்க மருந்து அளவை உறுதிசெய்யும் சூப்பர் சிரிஞ்ச், வித விதமான ட்ரோன்கள், பார்முலா ஸ்டூடன்ட் மின்சார ரேஸ் கார், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சு (3டி பிரிண்டிங்) உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

முன்னதாக இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்து ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, "இங்கு தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப் படுத்தியுள்ள மாணவர்கள் புத்தொழில் (ஸ்டார்ட் - அப்) தொழில்முனைவோராக மாற வாழ்த்துகிறேன்" என்றார்.

டீன் (மாணவர் நலன்) சத்ய நாராயணா பேசும்போது, "இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கண்டுபிடிப்புகளில் 15 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். புதிய சிந்தனைகளை தயாரிப்புகளாக மாற்றுவதிலும், அறிவு சார் சொத்துரிமைகளை பாதுகாப்பதிலும் ஐஐடி கண்டுபிடிப்பு மைய மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE