டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - ஜூன் 1ல் தேர்வு!

By KU BUREAU

கோவை: டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியா ராணுவ கல்லூரியில் ஜனவரி 2046 பருவத்தில், 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெறும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட்- 248 003 என்ற முகவரிக்கு பொதுப் பிரிவினர் ரூ.600, பட்டியல் பிரிவினர் ரூ.555-க்கான வங்கி வரைவோலையை எச்.டி.எப்.சி வங்கி, பல்லூபுர் சௌக் டேராடூன் (வங்கி குறியீடு -1399) இணை உத்தரகாண்டில் செலுத்தத்தக்க வகையில் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணைய வழியில் www.rimc.gov. in மூலமாக கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்

விண்ணப்பதாரர்களின் - (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 2-1-2013- க்கு முன்னதாகவும் 1-7-2014-க்கு பின்னதாகவும் கள் பிறந்திருத்தல் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. மேலும் 1-1-2026ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை (இரட்டிப்பு படியுடன்) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை -600003 என்ற முகவரிக்கு மார்ச் 31-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE