தரம் உயர்த்தப்படாத குடியாத்தம் பிச்சனூர்பேட்டை கங்காதரசாமி பள்ளி: நடப்பது என்ன?

By வ.செந்தில்குமார்

வேலூர்: குடியாத்தம் பிச்சனூர்பேட்டை கங்காதரசாமி நகராட்சி நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ரூ.1 லட்சம் வைப்புத்தொகை செலுத்தியும் கடந்த 9 ஆண்டுகளாக தரம் உயர்த்தவில்லை என அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியில் கங்காதரசாமி நகராட்சி நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1972-ம் ஆண்டு அப்பகுதி பொதுமக்கள் சார்பில் தொடக்க பள்ளி தொடங்குவதற்கான இடமும், கட்டிட வசதிகளையும் ஏற்படுத்தி நகராட்சி மற்றும் கல்வித்துறை வசம் ஒப்படைத்தனர். இதன்மூலம், அப்பகுதியைச் சேர்ந்த நெசவாளர்களின் பிள்ளைகள் பயனடைந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த பள்ளி கடந்த 2000-ம் ஆண்டு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் படித்த பலரும் மத்திய, மாநில அரசு பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கிடையில், கங்காதரசாமி நகராட்சி நடுநிலை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதற்காக பள்ளி மேலாண்மை குழு சார்பில் 2015-ம் ஆண்டு ரூ.1 லட்சம் தொகையை அளித்ததுடன் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோரினர். ஆனால், கடந்த 22 ஆண்டு கோரிக்கையும் வைப்புத்தொகை செலுத்தப்பட்டு, 9 ஆண்டுகளாகியும் பள்ளியை தரம் உயர்த்தும் முடிவு மட்டும் கிடப்பில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பள்ளியை தரம் உயர்த்தாததால் நெசவாளர்களின் பிள்ளைகள் அருகில் உள்ள அரசு நிதியுதவி பள்ளிகளில் நன்கொடை செலுத்தி சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பணம் செலுத்த முடியாதவர்களின் பிள்ளைகள் பள்ளி இடைநின்றலும் தொடர்வதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளி மேலாண்மை குழுவினர் கூறும்போது, ‘‘கங்காதரசாமி நகராட்சி நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி திமுக ஆட்சியில் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினிடமும், கடந்த 2012-ல் அப்போதைய மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அமைச்சர் வீரமணி, பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பல்வேறு கட்டிடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் போராட்டம் நடத்தியும் செவி சாய்க்காமல் உள்ளனர்’’ என்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக நீண்ட கால போராட்டங்களை முன்னெடுத்து வரும் புதிய நீதிக்கட்சியின் நகரச் செயலாளர் ரமேஷ் கூறும்போது, ‘‘பள்ளியை தரம் உயர்த்தக்கோரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அமுலு விஜயன், மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அப்படி இருந்தும் பள்ளியை தரம் உயர்த்த வாய்ப்பில்லை என கல்வி அதிகாரிகள் பதில் அனுப்பியுள்ளனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தயாளன் கடந்த ஜன. 3-ம் தேதி அனுப்பிய பதிலில் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த குறைந்தபட்சம் 50 பேர் படிக்க வேண்டும். ஆனால், அங்கு 12 மாணவர்களே படிக்கின்றனர். மேலும், ஒரு உயர்நிலை பள்ளியில் இருந்து மற்றொரு உயர்நிலை பள்ளிக்கு குறைந்தபட்சம் 5 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும். ஆனால், இந்த பள்ளியை சுற்றி 5 கிலோமீட்டருக்குள் 3 மேல்நிலை பள்ளிகளும் ஒரு உயர்நிலை பள்ளியும் உள்ளன.

அதேபோல், நகராட்சி பகுதியில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமானால் 10 கிரவுண்ட் இடவசதி இருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கு 1,500 சதுரடி காலி மனை மட்டுமே உள்ளது. எனவே, இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த விதிகளில் வழிகள் இல்லை எd கூறியிருக்கிறார். ஆனால், குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியும், நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியும் ஒரே வளாகத்தில் இயங்குகிறது. நெல்லூர்பேட்டையில் இரண்டு அரசு மேல்நிலை பள்ளிகள், ஜோதி மேல்நிலை பள்ளியும், சந்தப்பேட்டையில் வள்ளலார் மேல்நிலை பள்ளியும் சுமார் 1 கி.மீ. சுற்றளவிலேயே அமைந்துள்ளன. நடுப்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, நேஷ்னல் நிதியுதவி மேல்நிலை பள்ளி என அருகருகே இயங்கி வருகின்றன. இதெல்லாம் கல்வித்துறை விதிகளில் வரவில்லையா? என்பதை விளக்க வேண்டும். எங்கள் பகுதி பள்ளியை விதிகளில் தளர்வு அளித்து உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE