பயிற்றுநர்கள் இல்லை; செய்முறை தேர்வில் திணறிய பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்கள் - தமிழகத்தில் அதிர்ச்சி

By KU BUREAU

சென்னை: வேலை வாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் இல்லாததால் செய்முறைத் தேர்வில் பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்கள் திணறினர்.

தமிழகத்தில் 226 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண்மை, இயந்திரவியல், மின்னணுவியல், கணக்குப் பதிவியல், தட்டச்சு உள்ளிட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆசிரியர்கள் உள்ளனர். இது தவிர செய்முறை, வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி அளிக்க ‘அவுட்சோர்சிங்’ முறையில் மாதம் ரூ.22,000 ஊதியத்தில் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான ஊதியம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்காததால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்களை கடந்த ஆண்டு ஜூன் மாதமே பணியில் இருந்து கல்வித்துறை நிறுத்தியது.

இதனால் நடப்புக் கல்வியாண்டில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் திறன், செய்முறைப் பயிற்சி முறையாக அளிக்கவில்லை. இதனால், பிப்.4 முதல் பிப்.17-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் தொழிற்கல்வி மாணவர்கள் திணறினர்.

இது குறித்து மாணவர்கள் சிலர் கூறியதாவது: வேலைவாய்ப்புத்திறன் பயிற்றுநர்கள் வேலைவாய்ப்புத் திறன் பாடங்கள் நடத்துவதுடன் தொழிற்கல்விக்கான செய்முறைப் பயிற்சிகளை அளித்து வந்தனர். இதுதவிர பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று, மாணவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளித்தனர்.

அதேபோல் சாதித்த தொழில்முனைவோர் மூலம் மாணவர்களுக்கு கவுரவ விரிவுரையாளர் பயிற்சி அளித்தனர். அவர்களை நிறுத்திவிட்டதால் எங்களுக்கு பயிற்சிகள் சரிவர அளிக்கவில்லை. அதேபோல் செய்முறை பயிற்சியும் முறையாக அளிக்காததால் சிரமப்பட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரும் கல்வியாண்டிலாவது மாணவர்களின் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கி வேலை வாய்ப்புத்திறன் பயிற்றுநர்கள் மூலம் தொழிற்கல்வி மாணவர்களுக்கு செய்முறை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE