சென்னை: சென்னையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவில் 700 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் கல்லூரிகளின்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் என்எல்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்னகுமார் மோட்டுப்பல்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார்.
2024-ம் ஆண்டு இளநிலை பொறியியல் பட்டம் பெற்ற 700 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவரும் பட்டமளிப்பு விழா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பெ.சக்திவேல், வழிகாட்டு குழு உறுப்பினர் எஸ்.உஷா, உறுப்புக் கல்லூரிகளின் இயக்குநர் பெ.அரிகரன், டீன்கள் ஆர்.செந்தில், கோ.செந்தில்குமார், வே.கவிதா, பா.தமிழழகன், சி.முத்துக்குமரன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.