புதுச்சேரி: அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் செலுத்தினால் மட்டுமே பயிற்சி மருத்துவராக அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் மீது மாணவியின் பெற்றோர் மனுவை சென்டாக் பெற்றோர் மாணவர் நலச் சங்கத்தினர் ஆளுநர், முதல்வரிடம் புகாராக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்டாக் பெற்றோர் மாணவர் நலச்சங்கத்தின் தலைவர் நாராயணசாமி ஆளுநர், முதல்வர், கல்வியமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இன்று மனு அளித்தார். அது தொடர்பாக அவர் கூறியதாவது "கடந்த 2019 ஆண்டு சென்டாக் வழியாக நிர்வாக இடஓதுக்கீட்டில் மருத்துவம் படிக்க புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த வைசாலி என்ற மாணவி 2019, 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கு அரசு நிர்ணயித்த ஆண்டுக்கு ரூ.16 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு 80 லட்சம் கட்ட வேண்டும். அவர் கூடுதலாகவே ரூ.85 லட்சம் வரை செலுத்தியுள்ளார்.
தற்போது ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக ரூ.20 லட்சம் கட்டினால் தான் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான இன்டர்ன்ஷிப்புக்கு அனுமதிக்க முடியும் என்று, மாணவியின் கல்லூரி வருகை கைரேகை பதிவை தடை செய்து (வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி) கல்லூரி நிர்வாகம் மாணவியை வெளியில் அனுப்பி உள்ளது.
இதனால் மாணவி வைசாலி பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே புதுவை மாநில ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலாளர், சுகாதாரத் துறை இயக்குனர் ஆகியோர் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் மாணவி மருத்துவ கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்டர்ன்ஷிப் பயிற்சியின் போது அளிக்க வேண்டிய மாதம் ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.