இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கட்டணம் வசூல்? - கோவையில் புகார்

By KU BUREAU

கோவை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டில் 1-ம் வகுப்பு சேர்ந்து, தற்போது 2-ம் வகுப்பு செல்லும் மாணவர்களிடம் அரசு செலுத்தும் கட்டணம் குறைவாக உள்ளதாகக் கூறி, கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இதில், வரும் கல்வியாண்டு (2024-25) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதியுடன் முடிவடைந்தது.

கோவை மாவட்டத்தில் உள்ள 324 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் மொத்தம் 15,347 இடங்கள் உள்ளன. அதில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சுமார் 3,879 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு 4,186 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி முதல் வகுப்பு சேர்ந்து தற்போது 2-ம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் கல்வி கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, முதல் வகுப்பில் சேரும்போது மாணவர்களிடம் கட்டணம் எதுவும் பெறவில்லை. தற்போது 2-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தும்படி பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அரசு செலுத்தும் கல்விக் கட்டணம் குறைவாக உள்ளதாகவும், அதனாலேயே கல்விக் கட்டணம் வசூலிப்பதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்’’ என்றனர்.

இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு அந்த பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்தை அரசே வழங்கும்.

அரசு வழங்கும் கட்டணம் குறைவாக இருப்பதாக தனியார் பள்ளிகள் கருதினால், அரசிடம் முறையிட்டு, உரிய காரணங்களைக் கூறி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். மாறாக, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளிடம் எந்தவித கட்டணத்தையும் தனியார் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது. அரசிடம் மட்டும்தான் கட்டணத்தை கேட்டுப்பெற முடியும். குழந்தைகளிடம் கட்டணத்தை வசூலித்தால் அது சட்டப்படி குற்ற மாகும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE