பொங்கல் பண்டிகைக்காக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் - ஜன. 21, 27 தேதிகளில் நடைபெறும்!

By KU BUREAU

சென்னை: பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் ஜன.21,27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.

அந்த வகையில் இதற்கான தேர்வுகள் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 15ம் தேதி மாட்டுப் பொங்கல், நாளை 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனால் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் உள்ள யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

அதனை தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் வரும் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE