பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி திருச்சியில் தொடக்கம்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: தமிழக பள்ளிக்கல்வித்துறை, பெங்களூரு விஸ்வேசரய்யா அறிவியல் மையம் சார்பில், 8 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) தொடங்கியது.

ஏற்கனவே மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கண்காட்சியில் முதல் 2 இடங்கள் பெற்றவர்கள் 456 பேர் மாநில கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தனிநபர், குழு, ஆசிரியர் என மூன்று வகையில் இந்த கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 456 பேரில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கண்காட்சியை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர்கள் திருச்சி பா.செல்வராஜ், லால்குடி பி.முருகேசன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் திருச்சி ரவிச்சந்திரன், முசிறி கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் பொதுமக்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் வருகை தந்து பார்வையிடலாம். இந்தக் கண்காட்சியில் சிறப்பாக செயல்படும் தனிநபரில் 10, குழுவில் 15, ஆசிரியர் பிரிவில் 10 என மொத்தம் 35 பேர் தென்னிந்திய கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெறுவர். அவர்கள், தென்னிந்திய அளவில் புதுச்சேரியில் ஜன.21-ம் தேதி நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்பர். இன்று நடைபெறும் நிறைவுவிழாவில் தமிழக அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE