பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய தமிழி கல்வெட்டு எழுத்துகள்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி நடைபெற்ற தமிழி கல்வெட்டுப் பயிற்சியில் கல்வெட்டு எழுத்துகள் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழி கல்வெட்டு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது, ”சங்க காலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த தமிழி கல்வெட்டு எழுத்துகளின் சிறப்புகள் பற்றிக் கூறியதாவது, “பானை ஓடுகள், காசுகள், முத்திரைகள், நடு கற்கள், குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழி எழுத்துச் சான்றுகள், தமிழ் மொழியின் தொன்மைக்கு முதன்மைச் சான்றாகும்.

அசோகர் காலத்துக்கு முன்பே தமிழர் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கு தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகள் ஆதாரமாகும். வணிகப் பெருவழிகளில் உள்ள முக்கிய நகரங்களின் குன்றுகளில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மதுரையில் தான் உள்ளன” என்று கண்ணன் கூறினார்.

ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு, ”திருப்பரங்குன்றம், திருமலை, கீழக்குயில்குடி, ஜம்பை உள்ளிட்ட மலைக் குகைகள், நடு கற்கள், பானை ஓடுகளில் காணப்படுகின்ற தொன்மையான தமிழி கல்வெட்டுகளின் படங்கள், அச்சுப்படிகள் மூலம் தமிழி எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும்” பயிற்சி கொடுத்தார்.

ஆங்கிலம் உள்ளிட்ட மேற்கத்திய மொழிகளின் எழுத்துகள் தமிழி போல உள்ளதைக் கண்டு வியந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டதுடன், புறநானூற்றுப் பாடல்களை தமிழி எழுத்தில் எழுதி பழகினர். இந்த கல்வெட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE