திருச்சி என்ஐடியில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி பூங்கா: முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு

By KU BUREAU

பொறியியல் மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (என்ஐடி) இயக்குநர் ஜி.அகிலா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கே.மகாலிங்கம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வைரவிழா காணும் திருச்சி என்ஐடி-யின் முன்னாள் மாணவர்கள் 48 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் உள்ளனர். அதில் 930 பேர் பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும், 130 பேர் நிறுவனர்களாகவும் உள்ளனர். கடந்த 1987 முதல் இயங்கி வரும் முன்னாள் மாணவர்கள் சங்கம், என்ஐடி வளர்ச்சிக்கும், இங்கு பயிலும் மாணவர்களின் கல்விக்கும் பல்வேறு வழிகளில் உறுதுணையாக இருக்கிறது.

இந்நிலையில், என்ஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் உலகளாவிய சந்திப்பு நிகழ்ச்சி சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் ஜனவரி 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முன்னாள் மாணவர்கள் 1,500 பேர் பங்கேற்கின்றனர்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தலைமை வணிக உளவியலாளர் கோபி கல்லயில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பில் என்ஐடி-யில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாணவர்களை தொழில் முனைவோராக உருவாக்க என்ஐடி வளாகத்தில் 20 ஏக்கரில் ரூ.150 கோடியில் என்ஐடி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு பூங்கா அமைக்கப்பட உள்ளது. இங்கு தொழில் முனைவோர் தங்கள் ஆராய்ச்சி மையங்களை அமைக்கலாம். வேளாண்மை, நிதி, விண்வெளி, தொழில்நுட்பம், குவான்டம் கணினி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். படிக்கும்போதே மாணவர்களை தொழில் முனைவோர் ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவர்களது தொழில் முனைவு முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்.

ஒரு மாணவரது படிப்புக் காலம் முழுவதும் அவருக்கு தேவையான நிதியுதவி மற்றும் வழிகாட்டு உதவிகளை அளிக்கும் வகையில் ‘அடாப்ட் எ ஸ்டூடன்ட்’ என்ற திட்டம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கும் திட்டம், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பெற உதவும் திட்டம் போன்றவையும் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

* புதிய எம்டெக் படிப்பு அறிமுகம்

என்ஐடி இயக்குநர் அகிலா, துணை இயக்குநர் (கல்வி நிறுவன மேம்பாடு, முன்னாள் மாணவர் விவகாரங்கள்) ஜி.உமா ஆகியோர் கூறும்போது, ‘‘என்ஐடியில் 11 வகை பி.டெக். படிப்புகள், 31 வகை எம்.டெக். படிப்புகள் உள்ளன. பிடெக்கில் ஆண்டுதோறும் 1,500 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மாறி வரும் கல்வி, வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப, எம்டெக் (ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் & டேட்டா சயின்ஸ்) என்ற ஆன்லைன் படிப்பை 2025 ஜூனில் அறிமுகம் செய்ய உள்ளோம். அமெரிக்காவின் இலினாய்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இப்படிப்பு தொடங்கப்படுகிறது. இதில் பிடெக், எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்சிஏ பட்டதாரிகள் சேரலாம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE