இசை, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளில் சிறந்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் சிறப்பு ஒதுக்கீடு!

By லிஸ்பன் குமார்

சென்னை: இசை, ஓவியம், உள்ளிட்ட நுண்கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் புதிய முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சென்னை ஐஐடி நாட்டிலேயே முதல்முறையாக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் முறையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஒதுக்கீட்டில் தேசிய சாம்பியன்கள் 5 பேர் சேர்க்கப்பட்டனர். ஐஐடி வளாகத்தில் பன்முகத்தன்மை மிக்க சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் தற்போது இசை, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளில் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் முறையை அறிமுகப்படுத்துகிறோம்.

பொதுவாகவே, நுண்கலைகளில் சிறந்த மாணவர்கள் புதுமை மற்றும் படைப்பாற்றலில் சிறந்து விளங்குவர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதுமை சிந்தனை மிகவும் அவசியம். இதை கருத்தில் கொண்டு நுண்கலையில் சிறப்புற்று விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் முறையை கொண்டுவர முடிவு செய்தோம். இதற்கு ஐஐடி செனட், இணை சேர்க்கை வாரியம், மத்திய கல்வி அமைச்சகம், மத்திய கலாச்சார அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளன.

இதைத்தொடர்ந்து, சென்னை ஐஐடியில் உள்ள 14 துறைகளில் வழங்கப்படும் பிடெக் படிப்புகளில் தலா 2 இடங்களும், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பயோ இன்ஜினியரிங், பிசிக்ஸ் ஆகிய துறைகளில் கூடுதலாக தலா 2 இடங்களும் ஆக மொத்தம் 34 இடங்கள் நுண்கலை மற்றும் கலாச்சார சேர்க்கைக்காக புதிதாக உருவாக்கப்படட்டுள்ளன. 2 இடங்கள் எனில் அதில் ஒரு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடம் பொதுவானது.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது, மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய பால ஸ்ரீ விருது, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வழங்கும் தேசிய இளைஞர் விருது, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது, அகில இந்திய வானொலி அல்லது தூர்தர்ஷனின் பி கிரேடு சான்றிதழ் பெற்றவர்கள் உள்பட 9 பிரிவுகளில் விருது பெற்றவர்கள் உதவித்தொகை பெற்றவர்கள் இந்த தனி இடஒதுக்கீட்டுக்கு தகுதிபெறுவர்.

அவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் தரவரிசையில் இடம்பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பெற்ற விருதின் தகுதிக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண்கள் தரப்பட்டு அதன் அடிப்படையில் பிடெக் படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு ஒதுக்கீடு அடுத்த கல்வி ஆண்டில் (2025-2026) நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஜுன் 2 முதல் 8ம் தேதி வரை நடைபெறும். இந்த சிறப்பு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் எதிர்கால சூழலை கருத்தில்கொண்டு அதிகரிக்கப்படும்” என்று காமகோடி கூறினார். பேட்டியின்போது ஐஐடி டீன் (மாணவர்கள் நலன்) சத்தியநாராயணன் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE