சென்னை: சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைக்கின்றனர்.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது புத்தகக் கண்காட்சி டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை 17 நாள்கள் நடைபெற உள்ளது.
டிச.27ம் தேதி மாலை 4.30 மணி அளவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
பொங்கல் விழாவின்போது, புத்தகக் காட்சிக்கு மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகை தருவதால், இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்பாகவே புத்தகக் காட்சி ஜன.12-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புத்தகக்காட்சி விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்.
» முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்: இதுதான் காரணம்?
» 2026 தேர்தலில் புதிய வாக்காளர்களை நாம் தவறவிடக் கூடாது: கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 20 லட்சம் வாசகர்கள் வந்தார்கள், இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 20 கோடி அளவிற்கு புத்தக விற்பனை நடைபெற்றது. வாசகர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.