புதுக்கோட்டை - தவளைப்பள்ளத்தில் 3 மாணவர்களுடன் செயல்படும் அரசுப் பள்ளி!

By KU BUREAU

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் தவளைப்பள்ளம் அரசு தொடக்கப் பள்ளி 3 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. திருவரங்குளம் ஒன்றியம் குழந்தை விநாயகர் கோட்டை ஊராட்சி தவளைப்பள்ளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியானது சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டு வந்த இப்பள்ளியில், தற்போது 3 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர்.

இதுகுறித்து தவளைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: தவளைப்பள்ளத்துக்கு முக்கிய அடையாளமாக கருதக்கூடிய அரசு தொடக்கப் பள்ளியில் நிறைய பேர் படித்து வந்தனர்.

2 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். வகுப்பறைகள் போதுமானதாக உள்ளன. அடிப்படை வசதிகளும் உள்ளன. ஆனால், இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ள நிலையில், அவரும் பணிக்கு உரிய நேரத்துக்கு வருவதில்லை. பள்ளியில் கற்பித்தல் பணியை திறம்பட மேற்கொள்ளாததால் பிற பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேர்க்கும்போது அங்கு அடிப்படைக் கல்விகூட தெரியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, இக்கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் பயிலக்கூடிய வயதில் 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிகளில் பயில்கின்றனர். கடந்த ஆண்டு 11 மாணவர்கள் படித்த நிலையில், தற்போது 2, 4, 5 ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் மட்டுமே பயில்கின்றனர். இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளோம் என்றனர்.

இதுகுறித்து அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் என்.கலாராணியிடம் கேட்டபோது, “இதுகுறித்து பள்ளிக்கு சென்று விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE