நாமக்கல்: மல்லசத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்த அரிசன் காலனி என்ற பெயரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கருப்பு பெயிண்டால் அழித்தார்.
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிசன் காலனி என பெயரில் செயல்பட்டு வந்தது. இந்த பெயரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என மாற்றக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்பழகன் என்பவர் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, அரிசன் காலனி என்ற பெயரை மாற்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றம் செய்யும்படி ஆணையம் உத்திரவிட்டது.
இதையடுத்து பள்ளியின் பெயரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயரை மாற்றி அதற்கான ஆணையையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. இதையடுத்து, மல்லசமுத்திரத்தில் உள்ள பள்ளிக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த அரிசன் காலனி என்ற பெயரை கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்தார்.
» பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக்கூட்டம்: வேலூரில் நவம்பர் 28, 29-ம் தேதிகளில் நடைபெறும்
தொடர்ந்து பள்ளி பெயர் மாற்றப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். மேலும், பெயர் மாற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொண்ட முதியவர் கணேசன், வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதனிடையே பள்ளி பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.