பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக்கூட்டம்: வேலூரில் நவம்பர் 28, 29-ம் தேதிகளில் நடைபெறும்

By சி.பிரதாப்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வேலூரில் நவம்பர் 28, 29-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் துறை சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி நடப்பு மாதத்துக்கான துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டமானது வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 28, 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட துறைசார்ந்த இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல், இடைநின்ற மாணவர்களின் நிலை கண்டறிதல், பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE