மதுரை: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள் வழங்கிய நிலையில், முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை ஒரு செட் சீருடை மட்டும் வழங்கி உள்ளதால், தினமும் சலவை செய்து உடுத்தும் நிலையில் மாணவர்கள், பெற்றோர் சிரமப்படுகின்றனர்.
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாட நூல், சத்துணவு, சீருடைகள், புத்தகப்பை, காலணிகள், பேருந்து பயண அட்டை, வண்ண பென்சில்கள், கணித உபகரணம், சைக்கிள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு மாணவருக்கும் 4 செட் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டு முதல் ஒவ்வொரு மாணவருக்கும் சீருடை அளவு எடுத்து தைக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி முதலாம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் ஏப்ரலில் மாணவர்களின் அளவு எடுத்து தைக்கப்பட்டது. இந்தாண்டு ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஜூலையில் 2 செட் சீருடைகள் வழங்கப்பட்டன. அக்டோபரில் 3-வது செட் சீருடை வழங்கப்பட்டது. ஜனவரியில் 4-வது செட் சீருடை வழங்கப்படும்.
இதற்கிடையில், இந்தாண்டு முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அளவு எடுத்து தைக்கும் நடைமுறையால், இதுவரை ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலாம் வகுப்பு மாணவர்கள் ஒரு செட் சீருடையை தினமும் சலவை செய்து உடுத்தும் நிலையில் உள்ளனர். இதனால் பெற்றோர் சிரமப் படுகின்றனர்.
» டெல்லியை பதறவைக்கும் காற்று மாசுபாடு: +2 வரை நேரடி வகுப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை
» திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த போலீஸ்காரர் பணிநீக்கம் @ தஞ்சை
இதுகுறித்து முதலாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள் வழங்கி உள்ளனர். ஆனால் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியுள்ளனர். கொடுக்கும்போதே 2 செட் சீருடைகள் வழங்கியிருந்தால் சிரமம் இருந்திருக்காது. ஒரே சீருடை என்பதால் தினமும் சலவை செய்து உடுத்த வேண்டியுள்ளது. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம்.
மழைக்காலம் என்பதால் தினமும் ஒரே சீருடையை துவைத்து சரியாக காயாமல் கூட ஈர ஆடையை போட்டு செல்வதால் சிறுவர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, பள்ளி கல்வித்துறை மீதமுள்ள 2 செட் சீருடைகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலாம் வகுப்பு சேர்க்கைக்குப்பின் அளவு எடுத்து தைப்பதில் தாமதம் ஏற்பட்டது. விரைந்து வழங்க அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.