தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் திறன்களை ‘மேப்பிங்’ தயாரிப்பு - உயர்கல்வித் துறை செயலர் தகவல்

By ஆர்.ஆதித்தன்

கோவை: தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் திறன்களை 'மேப்பிங்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால் கூறியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் முதலாவது சி.ஐ.ஐ. கல்வி தொழில்நுட்ப இரண்டு நாள் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் இன்று தொடங்கியது. இதில், தமிழக அரசின் உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால் கலந்து கொண்டு, சி.ஐ.ஐ. மற்றும் கே.பி.எம்.ஜி. எனும் ஆய்வு அமைப்பு தயாரித்த உயர் கல்வி குறித்த அறிக்கையை வெளியிட்டார். கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால் பேசியதாவது: "தமிழகம் கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. உயர்கல்வித் துறையில் நாட்டிலேயே அதிகமான மாணவர் சேர்க்கை என்பது 50 சதவீதமாக உள்ளது. உயர்கல்வித் துறையில் உள்ள சவால்களை தமிழக அரசு உணர்ந்து, கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விளைவு அடிப்படையிலான கல்வியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில் பாடத் திட்டம், கற்பித்தல் முறைகள், மதிப்பீடுகளை சீரமைப்பது ஆகியவை அடங்கும். இதற்கு தொழில் நுட்பம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களின் திறன் முன்னேற்றம், மதிப்பீடு செய்தலில் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், தொழில்நுட்பம் மூலம் மாணவர்களின் திறன்களை மேப்பிங் தயாரிக்கும் பணியில் தமிழ்நாடு ஈடுபட்டு வருகிறது. இந்த முன்முயற்சி ஒவ்வொரு மாணவரின் குறிப்பிட்ட திறன்களை அடையாளம் காண உதவுவதுடன், திறன் இடைவெளிகளை மிகவும் திறம்பட பூர்த்தி செய்யவும் உதவுகிறது.

மேலும் உயர்கல்வியில் மேம்பட்ட படிப்பைத் தொடர்பவர்களுக்கு, முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21ம் நூற்றாண்டின் திறன்கள், புதிய சிந்தனை, படைப்பாற்றல், கூட்டு மனப்பான்மை மற்றும் மாணவர்களின் தகவல் தொடர்பை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம். தொழில்துறையின் 4.0 தேவைக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோடிக்ஸ் துறைகளில் திறன் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் கூட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சித் திட்டங்கள் ஆகியவை விரைவாக வளரும் பொருளாதாரத் திற்கு பங்களிக்கக்கூடிய வேலைக்குத் தயாராக இருக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு முக்கியமானதாகும். இத்துடன் முக்கிய மாநில பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைத்து கல்வித்துறையும், தொழில்துறையும் இணைந்து உலக திட்டங்களுக்கு ஏற்ப செயல்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம். சர்வதேச தரத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 கல்வியாண்டு முதல் முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது" என்று கே.கோபால் கூறியுள்ளார்.

இதில் சி.ஐ.ஐ.யின் தென் மண்டல தலைவர் ஆர்.நந்தினி,கோவை மண்டல முன்னாள் தலைவர் செந்தில் கணேஷ், தென் மண்டல முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வாரியர், கே. பி.எம்.ஜி. நிறுவன நிர்வாகி நாராயணன் ராமசாமி, மற்றும் கோவை மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE