சென்னை: மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட இருப்பதாக யுசிஜி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் அறிவித்தார்.
பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ நடைமுறைப் படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தொடங்கிவைத்தார். இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் யுஜிசி தலைவர் கூறியதாவது: 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். எனவே, நாம் தொழில்நுட்பரீதியாக இன்னும் வேகமாக முன்னேற வேண்டும். உயர்கல்வியில் ஆங்கில மொழி பிரச்சினை பெரும்பாலான மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு தாய்மொழியில் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். ஆங்கிலத்தை தகவல் தொடர்புக்காக ஒரு மொழிப்பாடமாக படித்தால்போதும். உலகில் முன்னேறிய நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் உயர்கல்வி வழங்கப்படுகிறது.
மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன்சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு உயர்கல்வி யில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
» தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
» நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு: காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் புகழாரம்
இந்த புதிய முறையின்படி, மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். அதேபோல், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக்கொள் ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.
துணைவேந்தர் நியமன விவகாரம்: பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்பதுதான் யுஜிசி விதிமுறை. ஆனால், யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பான பிரச்சினையால் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப் படாமல் உள்ளனர்.
துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகம் செயல்படுவது சரியானதாக இருக்காது. உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவைக் கொண்டு பல்கலைக்கழகத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.