இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் நவ.26ல் திறப்பு @ ஹரியானா

By லிஸ்பன் குமார்

சென்னை: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வருகிற 26ம் தேதி திறந்துவைக்கிறார்.

இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன வழிகாட்டி ரோபா சென்னையில் இன்று (புதன்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டது. ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது.

இங்கு, இந்திய அரசியமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத், கே.எம்.முன்ஷி உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களின் சிலைகள், ஓவியங்கள், இந்திய அரசியமைப்பு சட்டத்தின் அசல் பிரதி, அரசியலமைப்பு சட்டத்தை விவரிக்கும் சிற்பங்கள், கண்காட்சிகள், ஓவியங்கள், அஞ்சல் தலைகள், உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இந்த அருங்காட்சியகத்தை மக்களவை தலைவர் ஓம் பிர்லா இந்திய அரசியமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான நவம்பர் 26ம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் முதல் அரசியமைப்பு அருங்காட்சியகம் என கருதப்படும் இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழிகாட்டுவதற்காக சென்னை ஐஐடி அதிநவீன வழிகாட்டி ரோபாவை உருவாக்கியுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடந்தது. இதில், ஐஐடி வடிவமைப்பு பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் வழிகாட்டி ரோபோவை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜிண்டால் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.ராஜ்குமார், டீன் பத்மநாப ராமானுஜன் மற்றும் ரோபோவை வடிவமைப்பு பணியில் ஈடுபட்ட ஐஐடி மற்றும் ஜிண்டால் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் உடனிருந்தனர்.

வழிகாட்டி ரோபோ பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் கூறும்போது, "செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளோம். அருங்காட்சிய பார்வையாளர்களுக்கு அருங்காட்சியத்தின் சிறப்பு அம்சங்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துச்சொல்லும். பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்" என்று பாலசுப்பிரமணியன் கூறினார்.

ஜிண்டால் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜ்குமார் கூறுகையில்,"இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், அதன் கூறுகளை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் நோக்கிலும் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். ஆண்டு முழுவதும் இது திறந்திருக்கும்" என்று ராஜ்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE