சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் இரவில் இலவச சைக்கிள் வழங்கியதால் மாணவர்கள் சிரமம்

By இ.ஜெகநாதன்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு பள்ளிகளில் இரவில் இலவச சைக்கிள்கள் வழங்கியதால் மாணவ, மாணவிகள் சிரமமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாம்பட்டி, ஏரியூர், எஸ்.எஸ்.கோட்டை, முறையூர், பிரான்மலை, கிருங்காக்கோட்டை, சிங்கம்புணரி அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை 3 மணிக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தாமதமாக வந்தனர். இதனால் மாலை 6.45 மணிக்கு சில மாணவர்களுக்கு மட்டும் சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் ஆசிரியர்கள் இரவு 7.30 மணி வரை மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதனால் இரவில் சைக்கிள்களை கொண்டு செல்ல மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர். மேலும் சைக்கிள்களின் டயர்களில் காற்று இல்லாததால் உருட்டிச் சென்றனர்.

வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகள், கடைகளில் சைக்கிள்களை நிறுத்திவிட்டு சென்றனர். மாணவர்களின் சிரமத்தை அறிந்து இரவு நேரங்களில் பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE