கோவையில் 2 நாள் அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி தொடக்கம்

By ஆர்.ஆதித்தன்

கோவை: இந்திய அஞ்சல் துறை சார்பில் கோவை மாவட்ட அளவிலான அஞ்சல் தலைகள் சேகரிப்பு கண்காட்சி ‘கோவை பெக்ஸ்-2024’ பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.

இக்கண்காட்சியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து சிறப்பு அஞ்சல் உறை, புகைப்படங்கள் அட்டை மற்றும் அஞ்சல் தலைகளை வெளியிட்டார். இந்நிகழ்வில் அஞ்சல் துறை தலைவர் சரவணன், செயலாளர் நாராயணசாமி, கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியின் முதல் நாளான இன்று 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க அஞ்சல் தபால் தலைகளை பார்வையிட்டனர். இரண்டு நாள் நடைபெறும் இக்கண்காட்சியை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசமாகும். கோவை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆர்வமாக கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில், கோவைபெக்ஸ் - 2024 சிறப்பு அஞ்சல் உறை, சூழலியல் விஞ்ஞானி டாக்டர் சலீம் அலி சிறப்பு தபால் உறை உள்ளிட்ட நான்கு சிறப்பு தபால் உறைகளும், புகைப்பட அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன. மேலும், அஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வலர்கள் சார்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு சிறப்பு தபால் தலைகளும் பல்வேறு நாடுகளின் நாணயங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE