பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி

By KU BUREAU

சென்னை: பள்ளிக்கு சரியாக வராமல் வேறொரு நபர் மூலம் பாடம் நடத்தும் விவகாரங்களில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகைய தவறுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காத தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மீதும் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை, கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் அன்பில்மகேஸ் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்களின் விவரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், தர்மபுரி அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலை பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி பணிக்கு வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, 17-வது விதியின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆசிரியர் பாலாஜி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதில் அவருக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை நாகலட்சுமி, வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதேபோல, மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வருவதில்லை எனவும் தொடர் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பள்ளி மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பு. அதன்படி, பள்ளியில் ஆய்வு நடைபெறும்போது, ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறு நபர் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டால் அல்லது இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டால், அதன்மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

விசாரணையில் உண்மை இருந்தால், மாவட்ட கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். மேலும், பள்ளியில் இத்தகைய தவறுகள் நடைபெறும்போது அந்த விவரத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காத தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மீதும் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE