சட்ட பல்கலை.யில் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

By KU BUREAU

சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்புக்கான பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. அதன்படி கல்விச் சுற்றுலா எனும் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளி மாணவர்களை அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி படிப்பு தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னை விருகம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று கல்விச்சுற்றுலா வந்தனர். பல்கலைக்கழகத்தின் வளாகத்தை சுற்றி பார்த்த மாணவர்களுக்கு, அங்கு கற்று தரப்படும் சட்டம் சார்ந்தபடிப்புகள் குறித்து பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ்குமார், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், வாழ்வியல் ஒழுக்கம் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதன்பின்னர் மாணவர்களுக்கு சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE