எந்தவிதமான பிணையம், உத்தரவாதமும் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கல்வி கடன்

By KU BUREAU

புதுடெல்லி: ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு எந்தவிதமான பிணையம் , உத்தரவாதமின்றி ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கும் ‘பிஎம் வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

‘பிஎம் வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கஇந்த திட்டம் வகை செய்கிறது. குறிப்பாக, பிணையம் அல்லது உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும். கல்வி கட்டணம் மட்டுமின்றி, அது தொடர்பான இதர செலவுகளுக்கும் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெற முடியும். இதற்காக, 2024-25 முதல் 2030-31 வரையிலான காலத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு 75% கடன் உத்தரவாதம் வழங்க இந்த திட்டம் வகை செய்கிறது. கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் நிதிச் சுமையை குறைக்க மத்திய அரசு உத்தரவாதம் வழங்குகிறது.

மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். படிப்பை முடிக்கும் வரை, வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.

என்ஐஆர்எப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதி வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். குறிப்பாக,இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்காகவும் கல்விக் கடன் வழங்கப்படும். இதுபோல, என்ஐஆர்எப் பட்டியலில் 101 முதல் 200 வரையிலான இடங்களில் உள்ள மாநில அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் கடன் வழங்கப்படும். அதேநேரம், மத்திய அரசின் அனைத்து கல்விநிறுவனங்களிலும் சேர இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் மாணவர்களுக்கு புதிய கல்விக் கடன் வழங்கப்படும். அதேநேரம், ஓராண்டில், முதலாண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலவும், தொழில்முறை அல்லது தொழில்நுட்ப கல்வி பயிலவும் விரும்பும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முழு வட்டி மானியம்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமரின் உயர்கல்வி ஊக்கத்தொகை (பிரதமரின் உச்சத்தர் சிக்‌ஷா புரோத்சாஹன் பிஎம்-யுஎஸ்பி) திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு,படிப்பை முடிக்கும் வரை முழு வட்டி மானியம் வழங்கப்படும். தொழில்முறை, தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இந்ததிட்டத்தின்கீழ் கடன் பெற விரும்பும் மாணவர்கள், மத்திய கல்வித் துறையின் ‘பிஎம் வித்யாலட்சுமி’ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து பிரதமர் மோடிஎக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்,“இந்த திட்டம் அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பதை ஊக்குவிக்க உதவும். இளைஞர்களுக்குஅதிகாரம் வழங்கும். நம் நாட்டின்எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் நாடு முழுவதும் உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE