26 அரசுப் பள்ளிகளில் பசுமை வளாகத் திட்டம் - ரூ.5.20 கோடியை செலவீனம் செய்ய வழிகாட்டுதல்கள்!

By சி.பிரதாப்

சென்னை: தமிழகத்தில் 26 அரசுப் பள்ளிகளில் பசுமை வளாகத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5.20 கோடி நிதியை செலவீனம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை செயலர் பி.செந்தில் குமார் இன்று வெளியிட்ட அரசாணை விவரம்: ‘முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக பசுமை பள்ளிக்கூட திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு ரூ.15 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 2024-25-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக 26 பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.5.20 கோடி தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வான 26 பள்ளிகளிலும் சூரிய மின்சக்தி தகடு, சொட்டு நீர் பாசனம், தோட்டம் பராமரிப்பு மற்றும் பசுமை விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சூரிய மின்தகடு, பேட்டரி பராமரிப்புக்காக 2 ஆண்டுக்கு ரூ.6 லட்சம், ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.4.5 லட்சம், தோட்டம் பராமரிப்புக்கு மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.2.16 லட்சம், மழைநீர் சேகரிப்புக்கு ரூ.1.5 லட்சம், தோட்டம் அமைக்க ரூ.2.5 லட்சம், பசுமை விழிப்புணர்வுக்கு ரூ.2 லட்சம், இதர செலவுகளுக்கு 1.34 லட்சம் என்றபடி நிதியை பங்கிட்டுக்கொள்ள வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE