19 பல்கலை.களில் பட்டமளிப்பு விழா; அக்டோபர் மாதம் வரை 8.28 லட்சம் மாணவர்கள் பெற்றனர்: ஆளுநர் மாளிகை

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் மாதத்துக்குள் 19 அரசு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா முடிக்கப்பட்டு, அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 8.28 லட்சம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக ஆளுநரும், 20 மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தருமாகிய ஆர்.என்.ரவி, மாநிலத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் உறுதிப்பாட்டுடன், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, கடந்த அக்.31-க்குள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க அனைத்து துணை வேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில், கடந்த செப்.9-ம் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடங்கி, நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநர் தலைமை வகித்தார்.

அத்துடன், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்று மாணவர்களுக்கு, பட்டம், பதக்கங்களை வழங்கினார். அவர், 7,918 மாணவர்களுக்கு பட்டங்களை நேரிலும், 8,20,072 மாணவர்களுக்கு பட்டங்களை ஆளில்லா நிலையிலும் வழங்கியுள்ளார். 19 அரசுப் பல்கலைக்கழகங்களில் 8,27,990 பேர் பட்டங்களை பெற்றுள்ளனர்.

மீதமுள்ள சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் வேண்டுகோளின் பேரிலும், அப்பாட திட்டங்களின் காலமுறையைக் கருத்தில் கொண்டும் அதன் பட்டமளிப்பு விழா வரும் நவ.20-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இன்றைய போட்டிச் சூழலில், மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பட்டமளித்தல் உள்ளிட்ட குறித்த காலத்திலான கல்வி செயல்பாடுகள், மாணவர்கள் மேலும் பல வாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் அவசியம். இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நமது மாணவர்கள் நன்கு தயாராக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் ஆண்டுகளில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்ய துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இது, மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பட்டப்படிப்புச் சான்றிதழ்களை உடனடியாகப் பெற வழிவகை செய்கிறது. அவர்கள் வாய்ப்புகளைத் தாமதமின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது.

தமிழக ஆளுநர் மாளிகை, 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் இறுதிக்குள் நடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE