சென்னை தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவிகள் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

By KU BUREAU

சென்னை: திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டதை அடுத்து, சுமார் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயக்கமடைந்த மாணவிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியின் இரண்டாவது தளத்தில் பள்ளியின் வேதியியல் ஆய்வகம் இயங்கி வருகிறது. இதில் இருந்து இன்று காலை வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாணவிகள் மயக்கமடைந்தனர்.

உடனடியாக தீயணைப்புத் துறை மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. அதேபோல மேலும் சிலருக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் அங்கு திரண்ட பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி தரப்பில் இருந்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE