சென்னை: உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’, ‘புதுமைப்பெண்’ உள்ளிட்ட திட்டங்களால் மாணவர் சேர்க்கை மட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித் துறை சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு, முதல்முறை பட்டதாரிகள், பட்டியலின மாணவர்களுக்கு இலவச கல்வி, ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றால், இன்று நாட்டிலேயே அதிக அரசு பல்கலைக்கழகங்கள், 500-க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்து, தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவன கருத்துப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49 சதவீதம் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகம்.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில், 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 27 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இதில் பயிற்சி பெற்ற 1.84 லட்சம் பேரில், 1.19 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது இத்திட்டத்தின் மாபெரும் வெற்றியாகும்.
மேலும், தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்த 4.0 தரநிலையை எய்திடும் வகையில் ரூ.3,014 கோடியில் 45 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த 28,601 மாணவர்களுக்கு ரூ.213.37 கோடி கல்வி, விடுதி, போக்குவரத்து கட்டணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 4 லட்சத்து 13,241 முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகையாக ரூ.1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக்குகளில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் மாணவர்கள் 25 நாட்களுக்குத் தொழிலக உட்பயிற்சி வழங்க, ஒருவருக்கு தலா ரூ.16,600 உதவி தொகை வழங்கப்படுகிறது.
ஆராய்ச்சி மானிய திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ.50 கோடி உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தற்போது வரை 1,960 ஆராய்ச்சி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த, ரூ.1,000 கோடியில் தொடங்கப்பட்ட காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தில், பல பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்துக்கு பெருமை சேர்த்த 10 இஸ்ரோ விஞ்ஞானிகள் தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.
உயர்கல்வித் துறையில் நிறுவனவள திட்டமிடல் மற்றும் மென்பொருளுடன் கூடிய ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பு ரூ.150 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் 1,750-க்கும் மேற்பட்டகவுர விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் ஆராய்ச்சி ஊக்க தொகை திட்டத்தில், 120 மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
உயர்கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், தமிழகம் உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது