விழுப்புரம்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் அரசு வேலை கிடைத்துவிடும் என்கிற நிலை மாறி, போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருவதால், போட்டித் தேர்வு மையங்கள் அதிகரித்துள்ளன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வப் பயிலும் வட்டம் எனும் இலவசப் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், சேர்ந்து பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். முதன்முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1991ம் ஆண்டு இந்த போட்டித் தேர்வு மையம் சிறப்பாகச் செயல்படுவதை அறிந்து 1999ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு பயிற்சி மையத்திலும் தன்னார்வப் பயிலும் வட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியது. தன்னார்வப் பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேவையான புத்தகங்களை வேலைவாய்ப்புப் பயிற்சித் துறையே ஏற்பாடு செய்கிறது. தேவைக்கு ஏற்ப மாதிரித் தேர்வுகளையும் நடத்துகிறது. இத்தகைய இலவசப் பயிற்சி மையத்தில் இருந்தும் ஏராளமானோர் அரசு வேலைக்குச் சென்றுள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வில் பங்கேற்க தினமும் காலை முதல் மாலை வரை அமர்ந்து படிக்க போதுமான இடவசதி இல்லாத நிலை இருந்தது.
ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பூங்கா காலை 10 மணிக்கு பூட்டப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப் படுவதால் பூங்காவின் காம்பவுண்ட் சுவரேறி குதித்து குழுக்களாக அமர்ந்து படித்து வருகின்றனர். இப்படி சுவரேறி குதிக்கும் நிலையை போக்க பூங்காவின் விக்கெட் கேட்டான சுழலும் கதவை திறந்து வைக்க உத்தரவிடுமாறு ஆட்சியர் பழனியிடம் இந்து தமிழ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக பேசி விக்கெட் கேட்டை திறந்து வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
» அரசு பள்ளிகளில் நடைபெறவிருந்த கலை திருவிழா போட்டிகள் கனமழையால் தள்ளிவைப்பு
» 10, 11-ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல்: எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தேர்வு துறை அவகாசம்