இந்தியா - இலங்கை மாணவர்கள் இணைந்து செயற்கைக்கோள் தயாரிக்க ஒப்பந்தம்

By KU BUREAU

சென்னை: இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விண்வெளி ஆய்வு திறன்களை வளர்க்க இலங்கை தகவல்தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்எல்ஐஐடி) முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம், யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர்கள் கூட்டாக சேர்ந்து செயற்கைக் கோளை வடிவமைக்க உள்ளனர். இதை இஸ்ரோ 2025 இறுதியில் விண்ணில் செலுத்துகிறது. வளிமண்டல ஆய்வு, தகவல் தொடர்புபயன்பாட்டுக்கு இது உதவியாக இருக்கும். இலங்கை மாணவர்களின் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் முதல் விண்வெளி ஆய்வுதிட்டம் இதுவாகும்.

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்எல்ஐஐடி நிறுவனத்தின் தலைவர் இண்டி பத்மநாதன், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்கள் பேசியதாவது: ஸ்ரீமதி கேசன்: விண்வெளிக்கு எந்த எல்லையும் கிடையாது. அதேபோல, மற்ற நாடுகளுக்கும் விண்வெளி தொழில்நுட்பத்தை விரிவாக்கும் வகையில் இந்தபுரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசால்தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் மூலம் விண்வெளி சார்ந்த பல்வேறு தகவல்களை கற்றுத்தர உள்ளோம். ஒருமுறை பயன்படுத்தும்செயற்கைக் கோளை உருவாக்குவது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இண்டி பத்மநாதன்: அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இரு நாடுகளுக்கும் இந்த முயற்சி உத்வேகம் அளிக்கும். இரு நாடுகளின் மாணவர்களும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்துஅறிய உதவும். 2 கட்டங்களாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு செயற்கைக்கோள்தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். யாழ்ப்பாண மாணவர்கள் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் (அகமதாபாத்) அமைப்பின் இயக்குநர் பிரபுல்ல குமார் ஜெயின், உலக விண்வெளி வார சங்கத்தின் நிர்வாக இயக்குநர் அல்மா ஒக்பலேப் மற்றும் உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE