மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

By இல.ராஜகோபால்

கோவை: மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (அக்.03) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை 2024-2025 முதல் முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ - மாணவியருக்கு ரூ.1 லட்சம் வீதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும். ரூ.1 லட்சம் ஊக்கத் தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் முழுவதுமாக வழங்கப்படும்.

ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்பிற்கான ஆய்வறிக்கை, வாய்மொழி தேர்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டதற்கான இருப்பிடச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன் பெறலாம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE