அரூர் மாவட்டத்தில் 517 பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகளை அனுப்பும் பணி மும்முரம்

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை, 517 பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தருமபுரி மாவட்டம், அரூர் தொடக்கக் கல்வி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், காரிமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்கள் உள்ளன. இதில், 363 தொடக்கப் பள்ளிகள், 117 நடுநிலைப் பள்ளிகள்,17 அரசு உண்டி உறைவிட தொடக்கப் பள்ளிகள் உள்பட 517 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 28 ஆயிரத்து 687 மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் தற்போது அரூர் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்துள்ளன.

இவற்றை, ஒன்றியங்கள் வாரியாக வாகனங்கள் மூலமாக அனுப்பும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரூர் தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் இஸ்மாயில் மேற்பார்வையில் இதற்கான பணிகளில் அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”அரசின் உத்தரவுபடி, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாட மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கிட கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இவற்றை, பள்ளி தொடக்க நாளிலேயே மாணவர்களுக்கு கிடைத்திடும் வகையில், கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இது தவிர மாணவர்களுக்குத் தேவையான புத்தகப் பைகள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் நேரடியாக பள்ளிகளுக்கு அனுப்ப அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE