உதகை: பிடித்த பாடத்துடன், வேலை வாய்ப்பு பெறும் திறன் கல்வியையும் மாணவர்கள் பயில வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் நடந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், "உலகில் மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், உணவு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளும் அதிகரித்து விட்டன. ஆனால், இதை பூர்த்தி செய்ய உலகின் வளங்கள் குறிப்பிட்ட அளவிலேயே உள்ளன. இது பெரும் சவாலானது. இந்தயாவில், 4 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீர் உள்ளது.
இதில் 80 சதவீதம் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. உலகில் 50 சதவீத பகுதிகளில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. எரி சக்திக்கு நாம் புதைபடிவ எரிபொருட்களையே நம்பியுள்ளோம். தற்போது புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். ஆனால், இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் இதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய முடியாது.
அவை மிகவும் ஆபத்தானவை. இதனால், மாசு அதிகரிக்கும். நைட்ரஜன் பயன்பாடு அதிகரித்து, அவை நீர், நிலம் ஆகியவற்றில் படர்கின்றன. தாவரங்கள் குறிப்பிட அளவிலேயே நைட்ரஜனை கிரகிக்க முடியும். நீர்நிலைகளில் படர்ந்துள்ள நைட்ரஜன், நீர்நிலைகளில் பாசியை உருவாக்கி, அவற்றில் உள்ள உயிரினங்களை முழுவதுமாக அழித்து விடும். இதை சமாளிக்க அறிவியல், தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.
» மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் சட்டவிரோத செங்கல் சூளைகளை அகற்ற கோரி பாமக நூதன போராட்டம்
கல்வி முறைகளை மாற்றியமைக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கூட்டுப் பொருளாதாரத்தை நோக்கி செயல்பட வேண்டும். அறிவு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மாண்புகள் ஆகியவையே இந்த பெரும் சவால்களுக்கு தீர்வு ஏற்படுத்தும். உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை இதற்காக தயார்படுத்த வேண்டும்.
இந்தியாவில் 4.3 கோடி மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பபை முடித்தாலும் அதில் 11 சதவீதம் பேர் மட்டுமே முதுநிலை கல்வியை பெருகின்றனர். 1 சதவீத மாணவர்களே ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டம் பெறுகின்றனர். இளநிலை பட்டப்படிப்பு பெரும்பாலான
மாணவர்கள் கலை, அறிவியல், வணிகவியல் பட்டப் படிப்புகளிலேயே சேருகின்றனர். திறன் மேம்பாட்டு கல்வி அவசியமாகிறது.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடப் பிரிவை தேர்வு செய்ய ஊக்குவிக்க வேண்டும். பிடித்த பாடத்துடன், வேலை வாய்ப்பு பெரும் திறன் கல்வியையும் மாணவர்கள் பயில வேண்டும். மேற்கத்திய நாடுகளில் ஜனவரி மற்றும் ஜூலை என இரு கல்வியாண்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இதை நமது நாட்டிலும் செயல்படுத்தலாமா என ஆலோசிக்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார்.