நீட் வினாத்தாள் கசிவு குறித்தான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் அடிப்படை மற்றும் ஆதாரம் அற்றவை என தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது. ராகுல் காந்தியின் புகாருக்கு எதிராக இந்த விளக்கம் வெளியாகி உள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் பதிவு செய்திருந்தனர். நாடு நெடுக 571 நகரங்களில் 4,750 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாகக் சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்தனர்.
அவர்களின் உணர்வை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பிரதிபலித்திருந்தார். “நீட் வினாத்தாள் கசிவு என்பது 23 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் கனவுகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர வேண்டும் என்று கனவு காணும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அரசு வேலைக்காக போராடும் நம்பிக்கைக்குரிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, மோடி அரசு அவர்கள் அனைவருக்கும் சாபமாக மாறியுள்ளது. இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும், கடந்த 10 ஆண்டுகளாக அரசாங்கத்தின் திறமையின்மையால் எதிர்காலத்தை இழந்துள்ளனர்” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார்.
“கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களை வினாத்தாள் கசிவிலிருந்து விடுவிக்க காங்கிரஸ் உறுதியளிக்கிறது. மாணவர்களுக்கான ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான எதிர்கால சூழலே எங்களின் உத்தரவாதம்” என்றும் அந்த பதிவில் ராகுல் காந்தி பகிர்ந்திருந்தார்.
பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். ராகுல் - பிரியங்கா மட்டுமன்றி சமூக ஊடகங்களில் எழுந்த கொந்தளிப்புகளை அடுத்து தேசிய தேர்வு முகமை விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ’சமூக ஊடகங்களில் பரவும் வினாத்தாள் படங்களுக்கும், உண்மையான வினாத்தாளுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று பதில் தந்துள்ளது.
”இந்த சமூக ஊடக இடுகைகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் எந்த ஆதாரமும் இல்லாதவை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது, இதனால் சில தேர்வர்கள் அந்த வினாத்தாள்களுடன் வெளிநடப்பு செய்தார்கள். அந்த தாள்களே சமூக ஊடகங்களில் வெளியாயின. அவற்றுக்கு நீட் வினாத்தாளுக்கும் தொடர்பே இல்லை. இந்த வகையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நடக்கவே இல்லை. குறிப்பிட்ட தேர்வு மைய குளறுபடியால் பாதிக்கப்பட்ட 120 தேர்வர்களுக்கு பின்னர் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது” என்று தேர்வு முகமையின் மூத்த இயக்குநரான சாதனா பராஷர் இன்று விளக்கமளித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!
குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!
வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!
பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!