வினாத்தாள் கசிவில் இது புதுசு... நேர மண்டல வேறுபாட்டை வைத்து சர்வதேச ஐபி வாரிய தேர்வில் மோசடி

By காமதேனு

சர்வதேச அளவில் செயல்படும் ஐபி வாரிய தேர்வுகளில் இதுவரை இல்லாத புதுவிதமாக, நாடுகள் இடையிலான நேர மண்டல வேறுபாட்டை பயன்படுத்தி வினாத்தாள் கசிவு நிகழ்ந்திருப்பது சற்று தாமதாகமாக அடையாளாம் காணப்பட்டுள்ளது.

இன்டர்நேஷனல் பேக்கலரேட் வாரியத்தின் டிப்ளோமா தேர்வுகளை முன்வைத்து, அதன் கணித பாடத்துக்கான வினாத்தாள் வித்தியாசமான முறையில் கசியச் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரே நாளில் நிகழ்த்தப்படும் தேர்வில், வெவ்வேறு நாடுகளின் வேறுபட்ட நேர மண்டலங்களை பயன்படுத்தி, வினாத்தாள் கசிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாளினை மாணவர்கள் வெளியே எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றபோதும், வினாத்தாளில் இடம்பெற்றுள்ள வினாக்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து வந்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

வினாத்தாள் கசிவு

இத்தகைய வினாக்கள், வேறு நேர மண்டலத்தில் இன்னும் தேர்வு தொடங்காத தேசத்தின் ஐபி வாரிய மாணவர்களுக்கு பயனளித்துள்ளன. மே 2 அன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள், சில மணி நேரம் முதல் பல மணி நேரம் வரை தாமதமாக உலகின் இன்னொரு மூலையிலுள்ள தேசத்தில் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நேர மண்டலம் காரணமாக மணி நேரங்கள் முதல் அடுத்த நாள் வரை தேர்வுகள் தொடங்கவிருந்த தேசத்தின் மாணவர்களுக்கு பலனளித்துள்ளன. இவை சமூக ஊடகங்கள் சர்ச்சையானதை அடுத்து ஐபி வாரியம் சற்றுத் தாமதமாக சுதாரித்துள்ளது.

சர்வதேச அளவில் அமைந்துள்ள பள்ளிகளின் மத்தியில், 3 நேர மண்டலங்களில் ஐபி வாரியத்தின் ஆண்டுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கணித பாடத்துக்கான வினாத்தாள் கசிவை ஐபி வாரியம் உறுதி செய்த போதும், எந்த நாட்டில் கசிவு நிகழ்த்தப்பட்டது என்பதை வெளியிடவில்லை. ஆனால் சமூக ஊடக விவாதங்கள் துருக்கியில் இருந்து வினாத்தாள் கசிந்ததாக தெரிவிக்கின்றன.

துருக்கி வினாத்தாள் கசிவு உடனடியாக ஹாங்காங், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஐபி மாணவர்களுக்கு பலனளித்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் நேர மண்டலம் அதற்கான அனுகூலத்தை கொண்டிராததில், இந்திய மாணவர்கள் இந்த வினாத்தாள் கசிவில் ஏமாந்து போயிருக்கிறார்கள்.

ஐபி வாரிய மாணவர்கள்

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஐபி வாரியத்தின் 55 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், வினாத்தாள் கசிவுக்கான முதல் நிகழ்வு என்றும் தெரிய வந்திருக்கிறது. இன்டர்நேஷனல் பேக்கலரேட் எனப்படும் ஐபி வாரியத்தின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.1968 முதல் இவை செயல்பட்டு வருகின்றன. இது கலாச்சார மற்றும் புவியியல் பன்முகத்தன்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது.

ஐபி பாடத்திட்டம் பல திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 3-12 வயது குழந்தைகளுக்கான தொடக்கக்கல்வி திட்டம் இதில் முதலாவது. அடுத்தபடியாக 11-16 வயதுடைய மாணவர்களுக்கான இடைக்கல்வி திட்டம் வருகிறது. இறுதியாக 16-19 வயதுடைய மாணவர்களுக்கான டிப்ளமோ தொழிற்கல்வி திட்டம் வருகிறது. இந்த டிப்ளமோ மாணவர்களுக்கான கணித பாடத்தின் வினாத்தாள் கசிவு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி நேர மண்டலத்தால் பாதிக்கப்படாத வகையில் வினாத்தாள் மற்றும் தேர்வு நாளை தீர்மானிக்க ஐபி வாரியம் ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 210 ஐபி பள்ளிகள் உள்ளன, அவை அதிக அளவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரப் பகுதிகளில் அமைந்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!

ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!

இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE