தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி; 86 சதவீதம் மதிப்பெண் பெற்ற அனிதா... கலங்கும் உறவினர்கள்!

By காமதேனு

விழுப்புரம் அருகே, தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவி அனிதா, 86 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளது உறவினர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயலு (54). இவர் சைக்கிளில் சென்று மிளகாய் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் அனிதா 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தார். கடந்த மார்ச் 1-ம் தேதி தமிழ் தேர்வு எழுதிவிட்டு, 5-ம் தேதி நடைபெற இருந்த ஆங்கில தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.

மாணவி அனிதா பயின்ற சரவணம்பாக்கம் அரசுப்பள்ளி

இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி சைக்கிளில் மிளகாய் வியாபாரத்திற்கு சென்ற சுப்பராயலு, தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. தந்தை உயிரிழந்து சடலமாக வீட்டில் கிடத்தப்பட்டிருந்த போதும், அனிதாவின் சகோதரிகளும் தாயாரும் அவரை தேர்வுக்கு செல்லுமாறு ஊக்கப்படுத்தினர். கண்ணீரோடு தேர்வு எழுதி விட்டு அனிதா வீடு திரும்பிய பின்னர், சுப்பராயலுவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

செல்போனில் தனது மதிப்பெண்களை பார்க்கும் அனிதா

இந்த நிலையில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அனிதா 514 மதிப்பெண்கள் பெற்று 86 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்-99, ஆங்கிலம்-63, வரலாறு-77, பொருளாதாரம்-91, வணிகவியல்-93, கணக்குப்பதிவியல்-91 மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார். தந்தை இறந்த நாளில் அவர் எழுதிய ஆங்கில பாடத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அனிதா கூறும் போது, ”எனது தந்தை சைக்கிள் மூலம் மிளகாய் வியாபாரம் செய்து எங்கள் 5 பேரையும் படிக்க வைத்ததோடு, குடும்பத்தையும் காப்பாற்றி வந்தார். என் தந்தை இறந்து விட்டதால் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் இனி காப்பாற்றுவதற்கு ஆள் இல்லை. எனது படிப்பு, எனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நான் சிஏ படிக்க விரும்புகிறேன். எங்களுக்கு யாராவது உதவி செய்தால் நிச்சயம் என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE