ஏப்ரல் மாதத்திற்கான சம்பள உயர்வுத் தொகையான 2,500 ரூபாயையும் உடனடியாக வழங்கிடுமாறு தமிழக அரசுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி,இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களை பயிற்றுவிப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டில் 16,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2023 ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூபாய் 10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. அவர்களில் தற்போது 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில், இவர்களைப் பணிநிரந்தரம் செய்வதாக திமுக தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்றக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதனையடுத்து நடப்பு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூபாய் 2500 சம்பளம் உயர்த்தி வழங்க அரசு ஆணை வெளியிட்டது.
ஆனாலும், 10 ஆயிரம் ரூபாய் தனிக் கணக்கிலும், 2,500 ரூபாய் தனியாகவும் தனித்தனி பரிவர்த்தனையாகவே பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.மொத்தமாக இந்த 12,500 சம்பளமும் ஒரே பரிவர்த்தனையில் இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களின் சம்பளம் தாமதமாகவே வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் சம்பளமாக இதுவரை 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே மூலமாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இசிஎஸ் மூலமாக வழங்கும் அந்த 2,500 ரூபாய் இதுவரை பட்டுவாடா செய்யவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் , "ஏப்ரல் மாதம் இதுவரை 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 2,500 ரூபாய் இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும். இனி மொத்தமாகவே 12,500 சம்பளத்தையும் ஒரே பரிவர்த்தனையில் வழங்க வேண்டும். அதுபோல் மருத்துவக் காப்பீடு 10 லட்சம் ஆணையை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.
அதுபோல மே மாதம் சம்பளம் இல்லாமையால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களும் பரிதவிக்கிறோம். கருணைத் தொகையாக நடப்பு மே மாதம் சம்பளம் வழங்கி பகுதிநேர ஆசிரியர்களுக்கு உதவிட வேண்டும். திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியலை தர வேண்டும்" என்றார்.