சக ஆசிரியை மீது பாய்ந்து கடித்த தலைமை ஆசிரியை... பணி நேரத்து அலங்காரத்தை வீடியோ எடுத்ததில் விபரீதம்

By காமதேனு

வகுப்புக்கு செல்லாது ஃபேஷியல் மேற்கொண்ட தலைமை ஆசிரியையை தட்டிக்கேட்ட சக ஆசிரியை, பரிசாக கையில் ‘கடி’பட்டார்.

உத்தரபிரதேசத்தின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வகுப்புக்கு செல்லாது, ஃபேஷியல் அழகு அலங்காரத்தில் மும்முரமாக இருந்த தலைமை ஆசிரியையை, சக ஆசிரியை ஒருவர் தட்டிக்கேட்டார். பணிநேரத்தில் முறைகேடு செய்தவரை வீடியோவும் எடுத்தார். இதனால் கோபமடைந்த தலைமையாசிரியை சக ஆசிரியையை துரத்திச் சென்று கையில் கடித்து வைத்தார்.

ஃபேஷியல் - மாதிரி படம்

உன்னாவ் மாவட்டம் பிகாபூர் தொகுதியின் தண்டமாவ் கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது. இதன் தலைமையாசிரியையாக சங்கீதா சிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். பணி நேரத்திலும் அழகு, அலங்காரம் ஆகியவற்றுக்கு இவர் அதிகம் முக்கியத்துவம் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் சங்கீதா தனது பொறுப்பில் உள்ள பாட வேளைகளில் வகுப்புகளுக்கு செல்லாதும் இருந்திருக்கிறார். அந்த வகுப்பு மாணவர்கள் அதிகம் இரைச்சல் எழுப்பியதில், பள்ளியின் இதர வகுப்புகளிலும் பாடம் எடுக்க இயலாது சக ஆசிரியர்கள் தவித்தனர்.

இன்று காலை இதற்கு முடிவு கட்ட, அதே பள்ளியில் பணிபுரியும் உதவியாசிரியை அனம் கான் என்பவர் முடிவு செய்தார். அதன்படி, வகுப்புக்கு செல்லாது வழக்கம்போல, சமையலறைக்குள் உள்ளூர் அழகு சிகிச்சை பெண்ணை வரவழைத்து ஃபேஷியல் போட்டுக்கொள்வதில் மும்முரமாக இருந்த சங்கீதாவை கையும் மேக்கப்புமாக பிடித்தார். சமையலறைக்குள் திடீரென கேமராவுடன் புகுந்த அனம் கான் தன்னை வீடியோ எடுத்ததை கண்டு சங்கீதா அதிர்ச்சி அடைந்தார். ஃபேஷியலின் இறுதிக்கட்டத்தில் சங்கீதா சிங் இருந்ததால் அவரது முகம் வீடியோவில் தெளிவாக பதிவாகி இருந்தது.

தனக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியை தன்னை வீடியோ எடுப்பதை கண்டதும் வெகுண்டெழுந்த சங்கீதா சிங், ஆசிரியை அனம் கானை பிடிக்க விரைந்தார். இந்த விரட்டலின் முடிவில் அனம் கான் கையில் சங்கீதா சிங் கண்டபடி கடித்தும் வைத்தார். கடைசியில் மேற்படி வீடியோ மற்றும் கடிபட்ட காயம் ஆகியவற்றோடு காவல்துறை மற்றும் கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு அனம் கான் புகாரளித்தார்.

இன்று காலை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ, தேர்தல் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கையில் கடிக்கும் அளவுக்கு பிரச்சினை வெடித்ததால், சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE